சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஸ

சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2019 | 7:46 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் முன்னணியின் முதலாவது மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.

கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையுடன் கொழும்பில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் பொதுஜன பெரமுனவில் முதலாவது மாநாடு ஆரம்பமானது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

தாய்மார் பணிக்கு செல்லும் காலத்தில் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான வசதிகளை நாடு முழுவதும் விஸ்தரிப்பதுடன், அவ்வாறான திட்டங்களை உயர் தரத்தில் ஒழுங்கு முறையுடன் நாம் முன்னெடுப்போம். கடந்த காலத்தில் எவ்வித ஒழுங்கு முறையுமின்றி நாடு பூராகவும் வழங்கப்பட்ட நுண்கடன் வழங்கும் செயற்றிட்டத்தினூடாக கிராமங்களில் பல நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமிய பெண்களின் அறியாமையை பயன்படுத்திய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம். நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதே எமது இலக்கு. எமது அரசாங்கத்தின் முதல் வருடத்தில் உயர் கல்விக்காக பாரிய முதலீட்டை மேற்கொண்டு அனைத்து பிள்ளைகளும் உயர் கல்வியை பெற சந்தர்ப்பம் வழங்கி அதனை உறுதிப்படுத்துவோம். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் அதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்குகளை துரிதமாக நிறைவு செய்ய விசேட பொறிமுறையொன்றை நாம் திட்டமிட வேண்டும்.

இந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தார். அவர் இம்மாநாட்டில் தெரிவித்ததாவது,

நாம் தேர்தலில் தோல்வியடைந்தாலும் மக்களின் வாக்குகளை வெற்றிகொண்டுள்ளதாக எமக்கு அறியப்படுத்தியது பெண்கள் தான். தற்போதைய அரசாங்கம் பெண்களை புரிந்துகொள்ளவில்லை. அதனால் தான் இந்த ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பெண்களை ஏமாற்றுவது சிறந்தது அல்ல. பெண்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கினால் அதுதான் அவரின் இறுதிக்காலம். இது உங்களுக்கு புரிந்ததா ? அரசாங்கம் பொய் வாக்குறுதி வழங்கினால் அரசாங்கத்திற்கு இந்த நிலைமையே ஏற்படும். எமது நாட்டு பெண்களுக்கு இடமளிக்கும் கட்சியொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். இப்போது இந்த கட்சியில் அதிகம் பணிபுரிவது யார்? பெண்களே அதிகளவில் காணப்படுகின்றனர். நான் சென்று பாரத்த போது பசில் உடன் பெண்களே சூழ்ந்திருந்தனர். நேரடியாக கூறுவதாக இருந்தால் சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்