ஹாங்காங் போராட்டத்தின் வழிகாட்டி கைது

ஹாங்காங் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த ஜோஷூவா வாங் கைது

by Bella Dalima 30-08-2019 | 5:46 PM
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த ஆர்வலர் ஜோஷூவா வாங் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஹாங்காங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக இரத்து செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தது. இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம் ஆகிய முப்படைகளை சேர்ந்த 8,000 முதல் 10,000 வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று காலை ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயற்படும் ஆர்வலர் ஜோஷூவா வாங் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அவரின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஜோஷூவா கடந்த 2, 3 வாரங்களாக போராட்டத்தில் இல்லாதபோதும் அவர் போராட்டக்காரர்களால், மிக முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார். இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டக்காரர்களின் வழிகாட்டியாகவிருந்த ஜோஷூவா வாங் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.