பயங்கரவாதியின் எச்சங்களைத் தோண்டியெடுக்க உத்தரவு

மட்டக்களப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு உத்தரவு

by Staff Writer 30-08-2019 | 6:48 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்களை தோண்டியெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கல்வியங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. கல்வியங்காட்டில் வசிக்கும் மக்கள், தமக்குத் தெரியாமல் பயங்கரவாதியின் தலை புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், மக்களைத் திரட்டி போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்ததாகத் தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மேலும், புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்களை மீளவும் தோண்டியெடுக்க வேண்டுமெனவும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் இடங்களில் அவற்றை புதைக்க முடியாதெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மீளவும் அவற்றை வைத்தியசாலையில் வைக்குமாறும் ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், அரச செலவில் உகந்த இடத்தில் மக்களுக்கு பாதிப்பற்ற இடத்தில் புதைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்து மயானத்தில் புதைக்குமாறு தம்மால் உத்தரவிடப்படவில்லை எனவும் மட்டக்களப்பு நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.