சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணிகள் முன்னெடுப்பு

by Staff Writer 30-08-2019 | 8:12 PM
Colombo (News 1st) சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பேரணியாக சென்று மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக தமது உறவுகளைக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா மாவட்டத்தில் பன்றிகொய்த குளத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் பினனர் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஓமந்தை - இரம்பைக்குளம் சோதனை சாவடிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சந்தியா எக்னேலிகொட , அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி காந்தி பூங்காவை சென்றடைந்தது. இதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் கையளிக்கப்பட்டது. இதேவேளை, கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமான பேரணி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது. இதன் பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டி.ஏ. அதிசயராஜிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை கையளித்திருந்தனர். இதன் பின்னர் பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்முனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மஹஜர் கையளித்திருந்தனர். இதன் பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது. மன்னார் பாலத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி மன்னார் நகர​ சபை மண்டபம் வரை சென்றடைந்தது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினால் இந்த கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி - கந்தசுவாமி கோவிலில் தீச்சட்டி ஏந்தி விசேட வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பின்னர் தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் UNICEF அலுவலகத்திற்கு சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை கையளித்திருந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை - அட்டாளைச்சேனை பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.