கோட்டாவிற்கு எதிரான வழக்கு மீது நாளாந்தம் விசாரணை

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கை நாளாந்தம் விசாரிக்கத் தீர்மானம்

by Staff Writer 30-08-2019 | 3:53 PM
Colombo (News 1st) டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முதலாவது மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் ஷம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்திற்காக அரசுக்கு சொந்தமான 3 கோடியே 39 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் எழுவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த ஆட்சேபனை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்ட மா அதிபரின் ஒப்புதலுக்கு இணங்க தாக்கல் செய்யப்பட்ட, திருத்தப்பட்ட குற்றப்பத்திரத்திற்கு அமைய வழக்கை நடத்திச் செல்வதற்கு இணங்குவதில்லையென கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணி இன்று மன்றில் தெரிவித்தார். குறித்த குற்றப்பத்திரத்திற்கு பிரதிவாதிகள் இணங்காவிடின், இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்திற்கு அமைய வழக்கை தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்கு, முறைப்பாட்டாளர்கள் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்த, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப்ப பீரிஸ் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான தினத்தை தீர்மானிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். கோட்டாபய ராஜபக்ஸ குறித்த வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும், வழக்கு விசாரணைக்கு ஒரு வாரகாலம் எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது தெரிவித்தார். கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்திய நீதிபதிகள் குழாம் வழக்கு விசாரணைக்கான தினத்தை தீர்மானித்துள்ளதுடன், முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகள் நால்வரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.