கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2019 | 6:41 pm

Colombo (News 1st) திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவில் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடையை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்றுள்ளது.

வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிரசாந்தினி உதயகுமார் மற்றும் பிரதிவாதி தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, வழக்கை விசாரிப்பதற்கான நியாயாதிக்கம் இல்லையென தெரிவித்து ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வழங்குமாறு சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ கோரினார்.

இதனிடையே, குறித்த ஆட்சேபனைக்கான எதிர் ஆட்சேபனை மற்றும் எதிர் சத்தியக்கடதாசி என்பனவற்றை மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரியிருந்தார்.

இதனையடுத்து, இடைக்கால தடையை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் மனுதாரராக கன்னியா வெந்நீரூற்று ஆலய நிர்வாகி கோகில ரமணியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், எதிர்மனு தாரர்களாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்