UK பாராளுமன்ற ஒத்திவைப்பிற்கு மகாராணி அனுமதி

பிரித்தானிய பாராளுமன்ற ஒத்திவைப்பிற்கு மகாராணி அனுமதி

by Staff Writer 29-08-2019 | 9:18 AM
Colombo (News 1st) பிரித்தானிய பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு எலிஸபெத் மகாராணி அங்கீகாரம் வழங்கவுள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரெக்ஸிட் திட்டத்திற்கு சவால் விடுக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை மகாராணி ஏற்றுக்கொண்டுள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பிற்கான திகதிகளை ஏற்றுக் கொண்ட எலிஸபெத் மகாராணி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்த அனுமதியைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒக்டோபர் 14ஆம் திகதி வரையான ஒரு மாதத்திற்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி, குறிக்கப்பட்டவாறே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறவுள்ளது. உடன்படிக்கையுடனோ இன்றியோ இந்த வௌியேற்றம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 14ஆம் திகதி இடம்பெறும் மகாராணியின் உரையைத் தொடர்ந்து புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்து வைக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான புதிய அரசாங்கம் முன்கொண்டு செல்லப்படவுள்ளது. இதனிடையே இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை ​வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.