அர்ஜுன், கசுனின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது

by Staff Writer 29-08-2019 | 6:33 PM
Colombo (News 1st) அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த பிணை நிபந்தனையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று தளர்த்தினார். இதன் பிரகாரம், சந்தேகநபர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய முறிகள் ஏலத்தில் விடப்பட்ட போது பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு உள்வந்த மற்றும் வௌிச்சென்ற தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான அறிக்கையை வழங்குமாறு மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி முன்வைக்கப்பட்ட இறுவெட்டுக்களில் சில தொலைபேசி உரையாடல்கள் திரிவுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், அர்ஜூன் அலோசியல், கசுன் பாலிசேன, திலின சல்காது மற்றும் சஜித் மதுசங்க ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்த சந்தேகநபர்கள் முன்வைத்த இறுவெட்டு தொடர்பிலான அரச பகுப்பாய்வு அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு அரச இரசாயன பகுப்பாளருக்கு நினைவூட்டுமாறும் நீதவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.