ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்த அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 28-08-2019 | 2:06 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஶ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அறிக்கையூடாக ஆணைக்குழு முன்வைத்துள்ள 32 பரிந்துரைகளுக்கு அமைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக அதனை சட்டமா அதிபருக்கு அனுப்பவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2006 ஜனவரி முதலாம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஶ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. விசாரணைகளின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, 32 பரிந்துரைகள் தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. குறித்த முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் எழுத்து மூலம், வாய்மொழி மூலம் கிடைத்த தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழு ஆராய்ந்திருந்தது. இதேவேளை, குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்குள் குற்றச்செயல்கள் தொடர்பான சம்பவங்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிப்பதை கருத்திற்கொண்டு, அது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.