விளையாட்டுத்துறை குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்

விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 28-08-2019 | 9:02 PM
Colombo (News 1st) ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமாக பந்தயம் பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த இந்த சட்டமூலத்திற்கான மறுசீரமைப்புகளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் தெரிவிக்க முடியும். இந்த உத்தேச சட்டமூலத்தின் பிரகாரம் விளையாட்டுப் போட்டிகளுடன் தொடர்புடைய ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட மோசடிகளுக்கு நிதி வழங்குதல், ஒத்துழைப்பு வழங்குதல், அதற்கு முயல்கின்றமை உள்ளிட்டவை குற்றம் எனவும் அவ்வாறான குற்றங்களை இழைக்கும் நபர்களுக்கு 100 மில்லியனுக்கு குறையாத அபராதம் மற்றும் 10 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையை விதிக்க முடியும். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் சட்ட ஆலோசகரான பண்டுக கீர்த்திநந்த, அது குறித்த தகவல்களை வெளிப்படுத்த தவறினால் நீதவானால் 2 இலட்சத்திற்கு மேற்படாத அபாராதம் அல்லது 3 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என கூறினார். அவ்வாறான விடயங்களுக்கான விசாரணைகளுக்காக ஒத்துழைப்பு வழங்கத் தவறிய குற்றத்திற்கும் 2 இலட்சத்திற்கு மேற்படாத அபாராதம் அல்லது 3 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையை விதிக்க முடியும். இது தொடர்பிலான வர்த்தமானி அச்சிடப்பட்டுள்ளது.