மூன்று விசேட நீதிபதிகள் குழாம் நியமனம்

ரத்துபஸ்வல, எக்னெலிகொட, அவன்ற் கார்ட் வழக்குகளை விசாரிக்க 3 விசேட நீதிபதிகள் குழாம் நியமனம்

by Staff Writer 28-08-2019 | 7:30 PM
Colombo (News 1st) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட 3 நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோகம், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை , அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக இந்த நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின் கோரிக்கையின் பேரில் பிரதம நீதியரசரினால் நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றத்திற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நீதிபதி மேனகா விஜேசுந்தரவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. விமல் ரணவீர மற்றும் நிஷாந்த ஹப்புஆராச்சி உள்ளிட்டோர் குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக தம்மிக்க கனேபொலவின் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் குறித்த வழக்கின் ஏனைய நீதிபதிகள் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோராவர். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் விசாரணைகளுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் சம்பத் அபேகோன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் குறித்த குழாத்தின் ஏனைய உறுப்பினர்களாவர்.