முறிகள் மோசடி விசாரணையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 28-08-2019 | 4:43 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். முறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார். விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் நீதியை நிலைநாட்டுவதற்கான தடையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். முறிகள் மோசடி தொடர்பான நான்கு இடைக்கால அறிக்கைகள் கிடைத்துள்ளதெனவும் டிசம்பர் மாதமளவில் ஏனைய அறிக்கைகளையும் சமர்ப்பிக்க முடியுமெனவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்தூய்தாக்கல் தொடர்பில் வங்கிகளிடம் அறிக்கைகள் கோரப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அந்த அறிக்கைகள் வழங்கப்படவில்லையெனவும் இதனால் எதிர்காலத்தில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். முறிகள் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் இதன்போது குறிப்பிட்டுள்ளது. குறித்த சாட்சியங்கள் சத்தியக்கடதாசி ஊடாக டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படுமெனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக தம்மால் வழங்கப்படக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எஸ். சமரதுங்க மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.