வட பகுதி காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலற்ற வகையில் வட பகுதி காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 28-08-2019 | 7:16 PM
Colombo (News 1st) தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலற்ற வகையில் விடுவிக்கப்படக்கூடிய வட பகுதி காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யுத்த நிறைவின் போது பாதுகாப்பு தரப்பினரின் கீழ் இருந்த தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதில் கடந்த 5 வருடங்கள் தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முப்படையினருடன் இணைந்து வடக்கில் காணிகளின் பரப்பை கண்காணித்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்ற வகையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஆளுநரிடம் கையளிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வடக்கில் உள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவ முகாம்கள் அவசியம் எனவும், அது தொடர்பிலான அனுபவம் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு முகாம்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தனியார் காணிகள் இராணுவ முகாம்களுக்கு அவசியமாயின், அதற்காக நட்ட ஈடு செலுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் வட பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 80.98 வீத அரச காணிகளும் 90.73 வீத தனியார் காணிகளும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, வன இலாக்கா, வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, க. கோடீஸ்வரன், எஸ். ஶ்ரீதரன், எஸ். சிவமோகன், ஷாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.