தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

by Staff Writer 28-08-2019 | 5:19 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, வன இலாக்கா, வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, க. கோடீஸ்வரன், எஸ் ஶ்ரீதரன், எஸ்.சிவமோகன், ஷாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படையினர் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் விவகாரம் தொடர்பில் இங்கு எதுவும் கலந்துரையாடப்படவில்லையென கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.