G 7 நாடுகளின் நிதியுதவியை நிராகரிக்கும் பிரேஸில்

G 7 நாடுகளின் நிதியுதவியை நிராகரிக்கும் பிரேஸில்

by Chandrasekaram Chandravadani 27-08-2019 | 1:09 PM
Colombo (News 1st) அமேஸன் மழைக் காடுகளில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த G 7 நாடுகள் வழங்கவிருந்த உதவித் தொகையை நிராகரிக்கவுள்ளதாக பிரேஸில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமேஸன் மழைக் காடுகளில் வேகமாகப் பரவிவரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக G 7 நாடுகள் இணைந்து 22 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், குறித்த நிதியுதவியைத் தாம் நிராகரிக்கவுள்ளதாக பிரேஸில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உதவித் தொகையை நிராகரிப்பதற்கான காரணங்கள் எதனையும் பிரேஸில் அதிகாரிகள் குறிப்பிடாத போதும், தமது நாட்டை காலணித்துவ நாடு போன்று பிரான்ஸ் கவனித்துவருவதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பிரேஸிலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை, உதவிக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ள பிரேஸில் ஜனாதிபதியின் அலுவலக தலைமை அதிகாரியான ஒனிக்ஸ் லொரென்ஸோனி, அந்த நிதியானது ஐரோப்பாவை மீளக்கட்டியெழுப்ப உதவும் எனக் கூறியுள்ளார். இந்தநிலையில், பரவி வருகின்ற தீயைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சுற்றுச்சூழல் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் 44 000 படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.