by Staff Writer 27-08-2019 | 8:22 PM
Colombo (News 1st) விவசாய அமைச்சிற்காக குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட இராஜகிரிய கட்டடத்திற்கு ஒரு வருடம் வரை வாடகை செலுத்தி அதை பயன்படுத்தாமல் வைத்திருந்தமை அதிகாரிகளின் திறனற்ற தன்மை என பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகிய போது பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டடத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக சமன் ஏக்கநாயக்க இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாக தமது சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்து, விவசாய அமைச்சினால் நடத்திச் செல்லப்பட்ட கமநல அலுவலகத்தை கையகப்படுத்தியதாக பிரதமரின் செயலாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு வழங்கிய சாட்சியில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 5 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறினார்.