பலாலியிலிருந்து இந்தியா நோக்கி பயணம்

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை

by Staff Writer 27-08-2019 | 8:06 AM
Colombo (News 1st) பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகள் சேவையை முன்னெடுப்பதற்காக விமான நிலையத்திற்கு அருகில், சுங்கம், குடிவரவு குடியகல்வு மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவற்றின் அலுவலகங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 80 பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்தை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அதற்கேற்ற வகையில் விமான நிலையத்தை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் எச் எம் சி நிமல்சிறி தெரிவித்துள்ளார். இதனூடாக பலாலியிலிருந்து சென்னைக்கு 50 நிமிடங்களில் பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக 1,950 மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு விமான நிலையத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குறித்த விமான நிலையத்தில் சுங்கம், குடிவரவு குடியகல்வு மற்றும் அரச புலனாய்வு சேவை அலுவலகங்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இந்தப் பணிகளின் பின்னர், விமான நிலையத்தை மக்களுக்காக திறந்துவைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.