குப்பை லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

by Staff Writer 27-08-2019 | 8:22 AM
குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு Colombo (News 1st) கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்குக் கொண்டுசெல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், நடமாடும் பாதுகாப்பு சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகள் பல தடவைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமையினால் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையிடம் வினவியபோது, லொறிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு பொது சொத்துக்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்த லொறிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். புத்தளம் - அருவக்காட்டு பகுதிக்கு குப்பைகளைக் கொண்டுசென்ற லொறிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் நால்வர் 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தாக்குதலினால் இதுவரையில், 10 லொறிகள் மற்றும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.