மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன்?

ஊழல் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன்?

by Staff Writer 27-08-2019 | 10:55 AM
Colombo (News 1st) கடந்த அரசாங்கக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைப் போன்று இந்த அரசாங்கக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்தது. எனினும், இந்த ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதற்கு உதாரணமாக மத்திய வங்கியின் ஊழல் மோசடி, பாடசாலை மாணவர்களுக்கான டெப் (Tab) மோசடி போன்றவற்றைக் கூறலாம். இவற்றில் பொலிஸ் நிதிக்குற்றவியல் பிரிவு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு 2 கப்பல்களைக் கொள்வனவு செய்யும்போது ஏற்பட்ட பாரிய நிதி மோசடியே அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவமாகும். 2 கப்பல்களையும் 70 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்துள்ளனர். எனினும், இந்த 2 கப்பல்களுக்கு 52 மில்லியன் டொலரே செலவாகும் என FCID விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கப்பல் கூட்டுத்தாபனம் ஒரு தனியார் நிறுவனம் அல்ல. இது மக்களின் பணம் 200-இற்கும் அதிகமான கொள்கலன்களில் கழிவுப்பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்புலத்தில் யார் உள்ளனர்? சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் வௌியாகின. எனினும், வௌிப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை கவலைக்குரிய விடயமாக உள்ளது. பொறுப்புடைய அனைவரும் விலகிச் செல்கின்றனர். மத்திய வங்கியின் மோசடி தொடர்பில் தேடப்படும் அர்ஜூன ம​ஹேந்திரன் இன்னும் வௌிநாட்டிலேயே உள்ளார். அதேபோல், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட சுரேன் படகொட வௌிநாட்டில் உள்ளார். அதேபோன்று, சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல், அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றின் பிரதானியும் வௌிநாட்டிலேயே உள்ளார். மிக் கொடுக்கல் வாங்கல் வழக்குடன் தொடர்புடைய ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் வௌிநாட்டில் தான் உள்ளார். கப்பல் கூட்டுத்தாபன விவகாரத்துடன் பாரிய விடயம் ஒன்று வௌியாகியுள்ளது. China National Aero-Technology International Engineering Corporation நிறுவனத்தின் பிரதம அதிகாரி தொடர்பிலான பாரிய மோசடியொன்று தொடர்பில் FCID வௌிக்கொணர்ந்துள்ளது. Avic International நிறுவனம், Arinma Holdings நிறுவனம் என்பனவும் இந்த விசாரணையில் தொடர்புபடுகிறது. இங்கு பாரிய நிதி பரிமாறப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 7,50,000 டொலர் முன்னாள் பிரதி திறைசேரி செயலாளரின் 2 பிள்ளைகளின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்கு பரிமாறப்பட்டுள்ளது. தயாரத்ன என்ற பிரதி செயலாளருக்கு CATIC நிறுவனத்தினால் முன்வைக்கப்படும், வீதி அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட விலை மனுவை ஏற்றுக்கொண்டு CATIC நிறுவனத்திற்கே அந்த விலைமனு வழங்கப்பட்டு பணம் வழங்கப்பட்டதாகவே FCID கண்டறிந்துள்ளது. CATIC நிறுவனத்தின் பிரதம அதிகாரி இலங்கையில் லோட்டஸ் குரோ என்ற பெயரில், நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். அந்நிறுவனத்தின் 10 வீத பங்குகள் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மாஸ்டர் டொன் ஜயனாத் குமாரசிறி என்பவருக்கு சொந்தமானது. அவர் சர்சைக்குரிய மிக் கொடுக்கல் வாங்கலின் ஒரு சந்தேகநபராவார். இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. கடந்த அரசாங்கம் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கின்றது. ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டவர்களின் பதவிகளைப் பார்க்க வேண்டாம். அரசாங்கம் மாறுவதற்கு முன்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.