கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமைக்கு விளக்கம் கோரி அஜித் பி. பெரேரா, சுஜீவ சேனசிங்கவிற்கு கடிதம்

கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமைக்கு விளக்கம் கோரி அஜித் பி. பெரேரா, சுஜீவ சேனசிங்கவிற்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 7:10 pm

Colombo (News 1st) கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டதாகத் தெரிவித்து, அது தொடர்பில் எழுத்து மூலம் விளக்கம் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பி. பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் அஜித் பி. பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் கட்சியின் யாப்பு மீறப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள எழுத்து மூல முறைப்பாட்டையடுத்து, அவர்கள் இன்று அழைக்கப்பட்டிருந்தாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எனினும், இன்று அவர்கள் வருகை தராமையினால் எழுத்து மூலம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் விடயங்கள் கட்சியின் ஒழுக்காற்றுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஒழுக்காற்றுக்குழு அடுத்த கட்ட தீர்மானங்களை எடுக்கும் எனவும் அஜித் பி. பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் கட்சியின் தவிசாளர் இன்று பதிலளித்தார்.

கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் யாராவது அடிக்கடி முறைப்பாடு செய்திருந்தால், அந்த முறைப்பாடு தொடர்பில் எழுத்து மூலம் விளக்கம் கோருவது சாதாரண விடயம். சுஜீவ சேனசிங்க மற்றும் அகில விராஜ் ஆகியோர் கட்சியின் சட்டதிட்டங்களை மீறி செயற்பட்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒழுக்கத்தை மீறி இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலளித்தால் பிரச்சினை முடிவடைந்து விடும்

என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபிர் ஹாஷிம் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்