மத்திய வங்கியின் அறிக்கையை கோரும் அரச கணக்கு தெரிவுக் குழு

மத்திய வங்கியின் அறிக்கையை கோரும் அரச கணக்கு தெரிவுக் குழு

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2019 | 9:03 pm

Colombo (News 1st) கடந்த 20 வருடங்களில் இலங்கை மத்திய வங்கி, சட்டவிரோதமான நிதி நிறுவனங்கள் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையை அரச கணக்கு தெரிவுக் குழு கோரியுள்ளது.

இந்த நிதி நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள, நடவடிக்கைகளை துரிதமாக தௌிவுபடுத்துமாறு அரச கணக்கு தெரிவுக் குழு அறிவித்துள்ளது

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் அண்மையில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரச கணக்குத் தெரிவுக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 10 வருட காலத்தில் சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

18க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நாம் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்தோடு அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போதும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்

என இலங்கை மத்திய வங்கியின் நிதி நிறுவன மேற்பார்வைப் பணிப்பாளர் ஏ. ரணவீர தெரிவித்துள்ளார்.

பல்வேறு மூலோபாயங்கள் மற்றும் நிதி செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் மோசடியான முறையில் மக்களிடம் பணம் வசூலிக்கின்றமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

எனினும், இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பில் மாத்திரமே மத்திய வங்கி ஒழுங்குபடுத்தலை மேற்கொள்கின்றமை இதன்போது நிரூபனமாகியுள்ளது.

அதனால் இலங்கை மத்திய வங்கியிலிருந்து விடுபட்டுள்ள மோசடி நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் பண வைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நடைமுறையில் உள்ள சட்டங்களைத் திருத்தி தண்டனைகளைக் கடுமையாக்குவது தொடர்பிலும் அத்தகைய நிறுவனங்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் மத்திய வங்கி கட்டாயமாக கவனம் செலுத்த வேண்டும் என அரச கணக்குத் தெரிவுக்குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டின் சட்டத்தைத் திருத்துவதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் அடுத்த வருட இறுதிக்குள் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்