Cricket Aid நிறுவன மோசடி: மேலும் ஒரு வௌிக்கொணர்வு

Cricket Aid நிறுவன மோசடி: மேலும் ஒரு வௌிக்கொணர்வு

by Staff Writer 24-08-2019 | 7:35 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் கிரிக்கெட் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட ''Cricket Aid'' எனும் நிறுவனம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து உதவியாக 12,600 கிலோகிராம் அரிசி மற்றும் நூடில்ஸ் கிடைத்துள்ளது. அதனை சுங்க கட்டணத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மூலம் சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், பொருட்களை விடுவிப்பதற்காக 12,85,885 ரூபா நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொருட்கள் விடுவிக்கப்படும் முன்னர் அழிவடைந்துள்ளன. 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 24,78,268 ரூபாவை தமது செயற்பாடுகளுக்காக ஏற்கும் Cricket Aid நிறுவனம், அதன் முகாமையாளருக்கு ஒரு வருடம் 11 மாதங்களுக்காக 39,98,693 ரூபா செலுத்தியுள்ளது. இந்த முகாமையாளர் நிறுவனம் ஆரம்பிக்கப்படும் முன்னேரே இணைத்துக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கென ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பணம் செலுத்தப்படவில்லை என்ற போதிலும் அதற்காக 4 ,80,000 ரூபாவை நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்காக தேசிய வருமான வரித் திணைக்களத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 79,094 ரூபா வரிப் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு கிடைத்த 9 வருமான பத்திரங்கள் மற்றும் வருடாந்த செலவுகள், 19 வவுச்சர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்காக வைப்பிலிடுதல், கணக்காய்விற்காக தனியார் நிறுவனங்கள் இரண்டிற்கு 1,80,000 ரூபா மற்றும் 5,14,654 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூன் 4 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நிதி சேகரிப்பிற்காக பெறப்பட்ட 47,1095 ரூபாவைத் தவிர 13 வெளிநாட்டு விஜயங்களுக்காக பெறப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கிடைக்கவில்லை என்றும் கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் நடைபெற்ற செயற்பாடொன்றுக்காக 45,0750 ஸ்ரேலின் பவுண்கள் மதிப்பீட்டிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் 1.5 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. செயலாளர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடியவாறு இங்கிலாந்தில் வெளிநாட்டு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கும்படி நிதிப்பிரிவு தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர், உப தலைவர் ஆகியோர் ஆலோசனை வழங்கியதாக கணக்காய்வு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வெறுக்கத்தக்க செயற்பாடுகள் மற்றும் நிதி மோசடிகளை செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது இனியேனும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?