தடை நீக்கம் விசாரணைகளில் தாக்கம் செலுத்தாது

அவசரகால சட்ட ஏற்பாடுகள் மீதான தடை நீக்கம் விசாரணைகளில் தாக்கம் செலுத்தாது: பாதுகாப்பு அமைச்சு

by Staff Writer 24-08-2019 | 3:25 PM
Colombo (News 1st) அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கப்பட்டமை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் தாக்கம் செலுத்தாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 48 ஆம் பிரிவின் கீழ் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜாமாத் அமைப்பு, ஜமாதே மில்லதே இப்ராஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு ஜனாதிபதியால் மே மாதம் 21 ஆம் திகதி தடை விதிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. இந்த வர்த்தமானி தொடர்ந்தும் அமுலில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கப்பட்டாலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடரும் எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையானது, ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள், அவசரகால சட்ட ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் விசேட கட்டளைகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என வௌியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் கூறினார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாகவே மூன்று அமைப்புகளுக்கு தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, குறித்த அமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கும் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் எவ்வித இடையூறுகளும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.