அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை 

by Staff Writer 24-08-2019 | 3:52 PM
Colombo (News 1st) அனைத்து மாவட்டங்களிலும் அமைதியைப் பேணும் பொருட்டு முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 40 ஆவது அத்தியாயத்தினூடாக ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்ட ஏற்பாடுகள் நேற்று முதல் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது எப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அவசரகால சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன. இந்நிலையில், அமைதியை தொடர்ந்தும் நிலைநிறுத்தும் வகையில், ஆயுதம் தாங்கிய முப்படையினரை அனைத்து மாவட்டங்களிலும் கடமைகளில் ஈடுபடுத்த அதிவிசேட வர்த்தமானியூடாக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.