இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2019 | 3:41 pm

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 ஆம் திகதி இரவு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றினூடாக சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு முதல் உடல் நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று பகல் 12 மணியளவில் அருண் ஜெட்லி தனது 66 வயதில் இயற்கை எய்தினார்.

புதுடெல்லியில் 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அருண் ஜெட்லி பிறந்தார்.

ஜெட்லியின் தந்தை மகாராஜ் கிஷன் மற்றும் தாய் ரத்தன் பிரபா ஆகிய இருவரும் வழக்கறிஞர்களாவர்.

முன்னாள் இந்திய சட்ட மா அதிபர், முன்னாள் மத்திய அமைச்சர், சிறந்த பேச்சாளர், முற்போக்குவாதி என பல்வேறு பரிணாமங்களைக் கொண்டவரே அருண் ஜெட்லி.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய அரசு வரை பலமுறை பல்வேறு துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவரென்றே இவருக்கு இந்திய அரசியல் துறை புகழாரம் சூட்டுகின்றது.

நிதியமைச்சராக, பாதுகாப்புத்துறை அமைச்சராக, சட்டத்துறை, தொழில்துறை என பலதுறைகளுக்கு பொறுப்பு வகித்த அருண் ஜெட்லி, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக 2009 முதல் 2014 வரையிலும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த, தேர்ந்த வழக்கறிஞராகவும் செயற்பட்டவராவார்.

காங்கிரஸினால் 1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை எதிர்த்து ஜெட்லி தலைமையில் போராட்டங்கள் வலுப்பெற்றதுடன் இதனால் அவருக்கு 19 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனையின் பின்னரே அருண் ஜெட்லி என்ற நாமம் இந்திய அரசியலில் அறிமுகம் பெற்றது.

1999 ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக-வின் தலைமை செய்தித் தொடர்பாளராக திறமையாக செயற்பட்ட ஜெட்லிக்கு,
முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், முதன்முறையாக முதலீட்டு விலக்கல் அமைச்சகத்தை உருவாக்கி அதன் அமைச்சராகவும் ஜெட்லி நியமிக்கப்பட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜெட்லி தெரிவானவுடன், பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெட்லி அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

தீவிரவாதம், கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்டமை – இந்திய அரசியல் வரலாற்றில் அவருக்கென்ற தனி இடத்திற்கு வழிவகுத்தது.

2016 ஆம் ஆண்டு வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவித்த ஜெட்லி, வருமானவரியை செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்