பற்றி எரியும் பூமியின் நுரையீரல்

பற்றி எரியும் பூமியின் நுரையீரல்

by Bella Dalima 23-08-2019 | 6:24 PM
Colombo (News 1st) பிரேசிலின் அமேசான் காட்டில் பரவிய தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. மேலும், அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேசில் அதிபர் ஜேர் பொல்சொனரோ (Jair Bolsonaro) அமேசான் காடுகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் வேண்டுமென்றே தீ பரவலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அதிபரின் குற்றச்சாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக நல ஆர்வலர்கள், அரசின் சுற்றுச்சூழல் எதிர்ப்பு கொள்கையால் அரசு ஆதரவாளர்களே அமேசான் காடுகளுக்கு தீ வைத்து விபத்தை ஏற்படுத்த தூண்டியதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 9500 காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காட்டில் பதிவாகியுள்ளது. பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, அமேசான் காடுகளில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் 80 சதவிகிதம் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், அமேசான் காடுகள் கடந்த ஜூன் மாதத்தில், முந்தைய காலங்களை விட 88% அதிகமாக அழிக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் தங்களின் நில தேவைக்காக அமேசான் காட்டில் தீ மூட்டியதும் காட்டு தீ அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அமேசான் மழைக்காடுகளில் பற்றியெரியும் நெருப்பு மற்றும் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பழங்குடியினர் சமீபத்தில் வென்ற வழக்கு ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலகளாவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈக்வடோர் நாட்டின் எல்லையில் உள்ள பாஸ்தாசா பகுதியில் வோராணி எனப்படும் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு எண்ணெய் வளமும் ஏராளமாக உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வேட்டைக்காடாக இப்பகுதியை மாற்ற முயன்றன. ஈக்குவடார் அரசும் இதற்கு உதவ முன்வந்தது. எனவே வோராணி பழங்குடியினர் அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். எண்ணெய் நிறுவனத்தை தங்கள் இடத்திற்குள் குத்தகைக்கு விட்டால், தங்கள் வாழ்வாதாரம் அழியும் என்றும், வனப்பகுதிக்கு அழிவு ஏற்படும் எனவும் வழக்கில் தெரிவித்தனர். அரசோ வெறும், ஆய்வு மட்டும்தான் செய்யப்போகிறோம் என கூறியது. ஆனால், அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பிரிவின் கீழ் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதையும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் இப்பகுதியை நம்பி உள்ளதையும் கருத்திற்கொண்டு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட அரசுக்கு தடை விதித்தது நீதிமன்றம். கடந்த மே மாதத்தில் இந்த தீர்ப்பு வெளியானது. பழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் பெற்ற வெற்றி அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரியும் தீ மோசமான ஒன்றின் ஆரம்பம். பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் கார்பன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்.