மாகாண சபை தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அறிவிக்க தீர்மானம்

மாகாண சபை தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அறிவிக்க தீர்மானம்

மாகாண சபை தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அறிவிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2019 | 8:32 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்ப ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைக் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இன்று நிறைவு செய்த நீதியரசர்கள் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எல்லை நிர்ணய அறிக்கையுடனோ அல்லது அறிக்கை இன்றியோ மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான இயலுமை குறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை என மனுவின், இடை மனுதாரரான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நீதியரசர்கள் குழாமிற்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே ஆராய வேண்டும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை சட்டம் தற்போது அமுலில் காணப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி த சில்வா மன்றுக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, எல்லை நிர்ணய நடவடிக்கைகள் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படுகின்றமையை சுட்டிக்காட்டிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் , எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்