காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை திறக்கக்கூடாது

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாது எனும் கோரிக்கை நியாயமானது: சி.வி.விக்னேஸ்வரன்

by Staff Writer 23-08-2019 | 5:36 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழ். மாவட்டத்தில் திறக்கக்கூடாது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கை நியாயமானது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த விதம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான பயனையும் பெற்றுக்கொடுக்கவில்லையென முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மாறாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவுமே இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளையும் ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவையும் ஏமாற்றும் வகையில் வார்த்தை ஜாலங்களே இந்த அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் அதிகம் காணப்படுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாடு செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய நிவாரணத்தை வழங்குவதற்கு அதிகாரம் இல்லாத ஒன்றாகவே இந்த அலுவலகம் இன்று வரை செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.