வாரத்தில் ஒருநாள் ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடல்

பாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்

by Staff Writer 22-08-2019 | 10:08 AM
Colombo (News 1st) அனைத்துப் பாடசாலைகளிலும் வாரத்தில் ஒரு நாளை, ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த நாளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆங்கில மொழியிலேயே கலந்துரையாட வேண்டும் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் ஆங்கிலமொழி கற்றுக் கொடுக்கப்படுகின்ற போதிலும், பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலமொழி பேசுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனாலேயே, வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழியில் கலந்துரையாடுவதற்காக ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அன்றாட நாளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், மாணவர்களுக்கு பரீட்சயமாவதுடன் அதனூடாக ஆங்கிலமொழியில் சரளமாகப் பேசுவதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பாடசாலை அதிபர்களுக்கும் தௌிவுபடுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.