சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு

by Staff Writer 22-08-2019 | 7:39 PM
Colombo (News 1st) சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு இடையிலான கலந்துரையாடலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு இடையிலான கலந்துரையாடலை அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த கலந்துரையாடலின் ஊடாக நாட்டிற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கும் கொள்கையை செயற்படுத்துவதற்கு எண்ணுவதாகவும் மஹிந்த அமரவீர கூறினார். மேலும், பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடுவதைப் போன்று, கோட்டாபய ராஜபக்ஸவுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதாயின்,கோட்டாபய ராஜபக்ஸவுடனேயே அதனைக் கைச்சாத்திடுவதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்தால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்படுவார் என குறிப்பிட்ட மஹிந்த அமரவீர, கோட்டாபய ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்ல எனவும் கட்சியொன்றின் பிரதிநிதி ஒருவரை வெற்றி பெறச் செய்ய செயற்படப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவருக்கு தேவை எனின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியும் அல்லது சுயாதீனமாக இருக்கும் இயலுமையுள்ளது எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். அத்துடன், தேசிய அரசாங்கமொன்றுக்கு மீண்டும் செல்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.