கிளிநொச்சியில் தரமற்ற பாலங்கள் நிர்மாணிப்பு

by Staff Writer 22-08-2019 | 8:53 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தரமற்ற முறையில் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தேசிய மட்டத்திலான அபிவிருத்தி திட்டங்களின் கீழ் கிராமிய பிரதேசங்களில் 3500 முதல் 4000 வரையான பாலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. இந்தப் பாலங்களை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. கிராமப்புறங்களில் பாலங்களை நிர்மாணிப்பதற்கான விலைமனுக்களை கோருவதற்கு பைசர் முஸ்தபா அமைச்சராக இருந்தபோது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சிற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு கடந்த வருடம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. கிளிநொச்சி - முரசுமோட்டை - ஐயன் கோவிலடி , வட்டக்கச்சி சந்தையடி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பாலங்களும் உரிய தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். பாலங்கள் அமைக்கப்பட்டு குறுகிய காலத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. வெளிநாடுகளின் பல பில்லியன் நிதியைப் பெற்றுக்கொண்டு, கிராமங்களை அபிவிருத்தி செய்வதாகக் கூறி முன்னெடுக்கப்படும் இவ்வாறான தரமற்ற நிர்மாணப்பணிகள் மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. பாலம் அமைக்கப்பட வேண்டிய இடம் மற்றும் அது சார்ந்த விடயங்களில் தாங்கள் தொடர்புபடுகின்ற போதிலும், தரமற்ற நிர்மாணப் பணிகளுக்கு தாம் பொறுப்பில்லையென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் பல பிரதேங்களிலும் இவ்வாறு தரமற்ற முறையில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்தது.