இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைது

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைது

by Staff Writer 22-08-2019 | 7:52 AM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரம் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் (CBI) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. தன்னைக் கைது செய்வதிலிருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் ​நேற்று மறுத்திருந்தது. இந்நிலையில், அவர் நேற்றிரவு (21) கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சராக ப. சிதம்பரம் (P. Chidambaram) பதவி வகித்த 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில், INX நிறுவனம் 305 கோடி இந்திய ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அவர் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.