அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2019 | 6:52 am

Colombo (News 1st) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (22) காலை 8 மணி முதல், நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது.

உரிய வகையில் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட 8 காரணிகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக நோய்க்கான சிகிச்சை அலகுகள் மற்றும் இராணுவ வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்பட மாட்டாது.

வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், தரமற்ற மருந்துகளை விநியோகித்தல், சுகாதாரத் துறையை அரசியல் மயமாக்குதல், உரிய வகையில் வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்காததால் சில பகுதிகளில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றமை ஆகிய பிரச்சினைகளுக்கு சுகாதாரத் துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர், டொக்டர் பிரசாத் கொலம்பஹே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்