யசுஷி அகாஷி - சம்பந்தன் சந்திப்பு 

தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: யசுஷி அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு

by Staff Writer 21-08-2019 | 4:42 PM
Colombo (News 1st) இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசுஷி அகாஷி (Yasushi Akashi) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவு செய்யப்பட்ட போதிலும் , தமிழ் மக்களின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என இரா.சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார். யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்கேற்றிருந்ததாகவும் யசுஷி அகாஷியிடம் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்றுவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பாதிப்பாக அமையும் எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்