குப்பை லொறிகள் மீது கல் வீச்சு: கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவிப்பு

by Staff Writer 21-08-2019 | 6:06 PM
Colombo (News 1st) கொழும்பிலிருந்து அருவாக்காட்டிற்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற 28 லொறிகள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது தராதரம் பாராது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருவாக்காட்டிற்கு குப்பைகளைக் கொண்டு செல்லும் லொறிகளின் பாதுகாப்பிற்கு விசேட குழுக்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பிலிருந்து அருவாக்காட்டிற்கு குப்பைகளைக் கொண்டு சென்ற 28 லொறிகளை இலக்கு வைத்து கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் மற்றும் மணல் தீவு பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மறைந்திருந்த சிலர் இன்று அதிகாலை தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை, கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர் வண்டிகள் மீது நேற்று முன்தினம் அதிகாலையிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.