English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Aug, 2019 | 7:51 pm
Colombo (News 1st) ஹைதராபாத்திற்கும் கொழும்பிற்கும் இடையே பறந்து கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானமொன்றில் களியாட்ட நிகழ்வொன்று நடைபெற்ற காட்சிகளை நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (20) ஒளிபரப்பியிருந்தது.
கெசினோ சூதாட்ட நிறுவனமொன்றுடன் தொடர்புடைய குழுவினர் விமானத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பிலும் நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வெளியிட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விப்புல குணதிலக்க இன்று நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு பதிலளித்தார்.
இந்த விசேட சுற்றுலாவை மேற்கொண்ட குழுவினர் அவர்களுக்கென பிரத்தியேக சேவை ஒன்றை பெற்றுக்கொண்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி விப்புல குணதிலக்க தெரிவித்தார். இதற்காக அவர்கள் மேலதிகக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளதாக பிரதம நிறைவேற்று அதிகாரி கூறினார்.
இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாட்டாளர்களின் வர்த்தக நாமம் மற்றும் அவர்கள் எதிர்பார்த்த சேவைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமானத்தில் பயணித்தவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் விமானம் உரிய தரத்திற்கு அமையவே பயணித்ததாகவும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தரப்பினர் மேற்கொண்ட பிரசாரப் பணிகளின் போது ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பெயர் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அதற்காக நிறுவனத்தின் அனுமதி பெறப்படவும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படவும் இல்லை என பிரதம நிறைவேற்றதிகாரி மேலும் கூறினார்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு அனுப்பிய கடிதத்திற்கு இன்றைய தினத்திலேயே நியூஸ்ஃபெஸ்ட் பதிலளித்தது.
பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்புள்ள விப்புல அவர்களுக்கு…
எமது வெளிக்கொணர்வினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு களங்கம் ஏற்பட்டதாக நீங்கள் நினைப்பதால் உங்களது கருத்துக்களை எமது நேயர்கள் மற்றும் பொதுமக்கள் அறிய வேண்டும் என்பதற்காக நாம் அந்த கடிதத்தை பகிரங்கப்படுத்தினோம்.
89 வருட வரலாற்றைக் கொண்ட எமது நிறுவனம் தங்களது விமான சேவையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருவதாக நீங்கள் முன்வைக்கும் கூற்று உண்மையானது.
அந்த தொடர்பு எயார் சிலோன் என்ற பெயரில் எமது தேசிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் வரை நீடிக்கின்றது.
ஹைதராபாத்தில் இருந்து கொழும்பிற்கு முன்னெடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விமான சேவையின் போது முன்னெடுக்கப்பட்ட வர்த்தக பிரசாரம் தொடர்பில் நீங்களும் ஸ்ரீ லங்கன் முகாமைத்துவமும் அறியாதிருந்ததை இந்த விடயத்திலிருந்து விடுபடுவதற்கான காரணமாகக் கருத முடியாது.
இதன்போது இடம்பெற்றவை ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மாத்திரமல்லாது நாட்டிற்கும் ஏற்புடையதல்லவென்பது தெளிவாகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவை என்பது எமது தேசிய விமான சேவை என்ற வகையில், தேசத்தின் பெயரை உலகறியச் செய்யும் நிறுவனம் என்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ லங்கன் விமான சேவை கோப் குழுவிற்கு முன்பாக வினைத்திறன் மிக்க விடயங்களை முன்வைத்ததாக உங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோப் குழு கூட்டத்தை நீங்கள் தவறுதலாக புரிந்துகொண்டுள்ளமை அல்லது உங்களுக்கு தவறான தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
விமான சேவையை கட்டியெழுப்புவதற்காக நீங்கள் கொண்டுள்ள திட்டம் புதியதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும், மறுபுறம் அரச மற்றும் தனியார் கூட்டு தொழில் முயற்சியாக விமான சேவையை நடத்திச்செல்வதற்கான சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினர் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாது தேசிய விமான சேவையை விற்பதற்கு முயல்கின்றனர்.
கோப் குழுத் தலைவர் இது தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டு அந்த கருத்தை நிராகரித்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தரத்தை தாழ்த்தி அல்லது பணத்தை ஈட்டுவதற்காக முகாமைத்துவத்தினால் பின்பற்றப்படுகின்ற அனைத்து விடயங்களும் சரியானது என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைப்பீர்களாயின் அது முற்றிலும் தவறானதாகும்.
சர்ச்சைக்குரிய விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட செய்தியையே நாம் ஒளிபரப்பியிருந்தோம்.
அவர்கள் எதிர்நோக்கிய அசௌகரியத்தை அவர்களது முகம் பிரதிபலிக்கின்றது. இந்த நிகழ்வினால் அவர்கள் அச்சமடைந்திருந்தமையையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான அருவருக்கத்தக்க நிகழ்வுடன் தொடர்புடைய மேலும் பல காட்சிகள் எம்வசமுள்ளன. இதற்கு அனுசரணை வழங்கியவர்கள் தொடர்பிலான தகவல்களும் உள்ளன.
எனினும், இதனை ஒளிபரப்பினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு இது பாதகமாக அமையலாம் என்பதால் நாம் அதனைத் தவிர்க்கின்றோம்.
எவ்வாறாயினும், கேள்விக்கு வித்திட்டுள்ள நிகழ்வு தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நாம் பிரதமர் மற்றும் உங்களது கடிதத்தில் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.
விப்புல அவர்களே பிரதம நிறைவேற்றதிகாரியாக நீங்கள் தெளிவானதோர் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
நீங்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டியது ஸ்ரீலங்கன் விமான சேவையின் மேம்பாட்டிற்காகவா அல்லது தனியார் கெஸினோ சூதாட்ட நிலையத்தை ஊக்குவிப்பதற்காகவா?
நாமறிந்த வகையில் பிரதமர் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு தேசிய விமான சேவையில் இத்தகைய அருவருக்கத்தக்க செயற்பாடுகளுக்கு இடமளித்திருக்கமாட்டார்.
நாம் ஒளிபரப்பிய செய்தியின் உண்மைத்தன்மைக்காக நாம் முன்நிற்கின்றோம்.
சர்ச்சைக்குரிய நிகழ்வு தேசிய விமான சேவைக்கு ஏற்பட்ட மாபெரும் களங்கமாகும்.
05 Oct, 2017 | 07:03 PM
09 Feb, 2017 | 04:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS