இந்தோனேசிய நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு

இந்தோனேசிய நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு

இந்தோனேசிய நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Aug, 2019 | 11:00 am

Colombo (News 1st) இந்தோனேசியாவின் மேல் பப்புவா மாகாணத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரான மனோக்வாரியில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து வாகனங்கள், கட்டடங்கள் போன்றவற்றிற்கு சேதம் இழைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மேல் பப்புவா பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றிலிருந்து 250 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, இந்த சிறைச்சாலை உட்பட பல கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

இந்தோனேசிய நாட்டுக் கொடிக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் பப்புவாவைச் சேர்ந்த மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியம் பப்புவா. டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த பிராந்தியம் 1963 ஆம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டது.

ஆனால், இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை இந்தோனேசியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்துக்கொண்டு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.

இதனால் பப்புவா பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாத அமைப்பு பல ஆண்டுகளாக இந்தோனேசிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி இந்தோனேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தலைநகர் மனோக்குவாரியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்துள்ளது.

பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றுள்ளனர்.

அதேசமயம் பொலிஸார் மீது, கற்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் வீசித் தாக்கியுள்ளனர்.

அங்குள்ள அரச அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கும் தீ வைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்