Cricket Aid நிறுவன நிதிக்கு என்னவானது?

சிறுநீரக நோயாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட Cricket Aid நிறுவன நிதிக்கு என்னவானது?

by Staff Writer 21-08-2019 | 8:56 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட Cricket Aid எனும் நிறுவனம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவேற்று அதிகார குழுக்கூட்டத்தில் உதவி செயற்பாடுகளுக்காக கிரிக்கெட் உதவித்தொகை வேலைத்திட்டமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் Cricket Aid எனும் நிறுவனம் போன்ற பிணைக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனத்தை ஸ்தாபிக்க அனுமதி வழங்கப்படவில்லை. 13 நோக்கங்களை இலக்காகக்கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட Cricket Aid நிறுவனத்தின் பிரதான தொனிப்பொருள் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும். அந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்தாலும் சிறுநீரக நோயாளர்களுக்கென எந்தவொரு நிதி உதவியும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. Cricket Aid நிறுவனத்தின் கீழ் நிதி சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றுக்காக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் செலவு அறிக்கை ஒன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குடன் அது தயாரிக்கப்படவில்லை என கணக்காய்வின் கண்காணிப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2016 மே 30 ஆம் திகதி FC -097 எனும் இலக்க வவுச்சர் ஊடாக 54,000 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி தீர்மானிக்கப்பட்ட விதம், பணம் பெறப்பட்டமை, அதனை பயன்படுத்திய நபர்கள் தொடர்பாக உறுதி செய்யப்படவில்லை. Cricket Aid எனும் நிறுவனத்தின் ஊடாக 2016 மே 23 ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31 வரை 3,028,7100 ரூபா நிதி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. Cricket Aid நிறுவனத்திற்காக வெளிநாட்டு நிதி கணக்கொன்றை ஆரம்பிக்க இலங்கை மத்திய வங்கியில் கோரப்பட்ட போதிலும் இலங்கை மத்திய வங்கி அதனை நிராகரித்துள்ளது. அதனை விடுத்து ஆரம்பிக்கப்பட்ட Cricket Aid கணக்கை யார் ஆரம்பித்தது, யார் அதனை நிர்வகிப்பது, சம்பந்தப்பட்ட ஏனைய கணக்கு வழக்குகளைப் பார்ப்பது யாரென்பது உள்ளிட்டவை உறுதி செய்யப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் உதவித்தொகை வேலைத்திட்டத்தை விஸ்தரிப்பதற்காக இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நிதி சேகரிப்பிற்காக நடத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்காக 1,48,32,506 செலவிடப்பட்டுள்ளது. அதனூடாக 1,30,28,000 ரூபா பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதனூடாக ஈட்டப்பட்ட வருமானம் 47,01,095 ரூபா என்பதோடு, அந்த நிதி சேகரிக்கப்பட்ட விதம் மற்றும் நிதி நிறுவனத்திற்கு உரிய முறையில் கிடைத்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை. Cricket Aid நிறுவனம் இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தேசிய வருமான வரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் வரி செலுத்தப்படவுமில்லை. இவ்வாறான வெறுக்கத்தக்க செயற்பாடுகள் மற்றும் நிதி மோசடிகளை செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது இனியேனும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?