கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்ற லொறிகள் மீது மீண்டும் தாக்குதல்

கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்ற லொறிகள் மீது மீண்டும் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 7:58 am

Colombo (News 1st) கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளைக் கொண்டுசென்ற 28 லொறிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 4 வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மற்றும் மணல்தீவு பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மறைந்திருந்த சிலர் இன்று (21) அதிகாலை தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை,கொழும்பின் குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, உரிய பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர சபை, நேற்று முன்தினம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, இடைக்கிடையே ஏற்படும் தடைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநாகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இதற்கான கடிதத்தை நேற்று, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​கொழும்பு குப்பைகளைக் கொண்டுசென்ற டிப்பர் வண்டிகள் மீது நேற்று முன்தினம் அதிகாலையும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குப்கைகளைக் கொண்டுசெல்லும் மார்க்கங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்