இலங்கை உலகிற்கு சிறந்த முன்னுதாரணம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கு சிறந்த முன்னுதாரணம்: யசூஷி அகாஷி

by Staff Writer 20-08-2019 | 5:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை மேற்கொண்ட செயற்பாடுகள் உலகத்திற்கு சிறந்த முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் யசூஷி அகாஷி (Yasushi Akashi) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நாட்டு மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட செயற்பாடுகள் ஏனைய நாடுகளுக்கு சிறந்த பாடம் எனவும் யசூஷி அகாஷி கூறியுள்ளார். இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைபெற செய்ய யசூஷி அகாஷியின் பங்களிப்பிற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் சிறந்த நட்புறவிற்கு பௌத்த தர்மம் சிறந்த அடித்தளம் என இதன்போது இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் யசூஷி அகாஷி சுட்டிக்காட்டியுள்ளார்.