ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்கக் கோரும் கடிதத்தில் கையொப்பமிடாதவர்கள் யார்? 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்கக் கோரும் கடிதத்தில் கையொப்பமிடாதவர்கள் யார்? 

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 9:00 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழு 7 நாட்களுக்குள் கூடி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என 55 பேர் கையொப்பமிட்டு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கட்சியின் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று கருத்துத் தெரிவித்தார்.

பிரதமர் அக்கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவருக்கு கட்சியின் யாப்பு தொடர்பில் நன்கு தெரியும் எனவும் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள அந்தக் கடிதத்தில் அகில விராஜ் காரியவசம் கையொப்பமிட்டிருக்கவில்லை.

அத்துடன், லக்ஷ்மன் கிரியெல்ல, பாலித்த ரங்கே பண்டார, ஜே.சி. அலவத்துவல, நவீன் திசாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே, காமினி ஜயவிக்ரம, ரவி கருணாநாயக்க, அஜித் மான்னப்பெரும, திலக் மாரப்பன, சிசிர குமார, வடிவேல் சுரேஷ், டி.எம். சுவாமிநாதன், வஜிர அபேவர்தன, விஜயகலா மகேஷ்வரன், ஜயம்பதி விக்ரமரத்ன, லக்ஷ்மன் விஜேமான்ன, ருவன் விஜேவர்தன, சரத் பொன்சேகா எம்.எஸ். தௌபீக் ஆகியோர் இந்தக் கடித்தத்தில் கையொப்பமிடவில்லை.

கடிதத்தில் கையொப்பமிடாதவர்களில் அதிகமானவர்கள் வேறு கட்சிகளில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புபட்டவர்கள் என்பதுடன், அவர்களில் அதிகமானவர்கள் விமர்சனத்திற்கு உள்ளானவர்கள்.

அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சராக செயற்படும் காலத்தில், அவருக்கு எதிராக பாடசாலை பாடப்புத்தகங்களில், தமது புகைப்படத்தை பிரசுரித்து, சுரக்ஷா காப்புறுதி, பாடசாலை சீருடை வவுச்சர் போன்ற விடயங்களில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

லக்ஷ்மன் கிரியெல்ல, சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பொதுஜன பெரமுன ஆட்சியில் பதவிகளை வகித்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

79 வயதான ஜோன் அமரதுங்க, கட்சியின் எதிர்காலத்தை இளைஞர்களுக்கு வழங்குவதற்கு எடுக்கும் முயற்சி இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தௌிவாகின்றது.

பாலித்த ரங்கே பண்டார வாகன அனுமதிப்பத்திரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்ட தயா கமகே சமுர்த்தி நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி, மிதக்கும் மின் உற்பத்தி நிலையம், தனியார் மின் கொள்வனவு தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தின் பின்னர் இராஜினாமா செய்து மீண்டும் அமைச்சுப் பதியை பெற்றுக்கொண்ட திலக் மாரப்பனவும் இந்தக் கடிதத்தில் கையொப்பமிடவில்லை.

​கட்சி தாவுவதற்கு பெயர் பெற்ற வடிவேல் சுரே‌ஷூம் இந்தக் கடிதத்தில் கையொப்பமிடவில்லை.

கடந்த அரசாங்கத்தின் போது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டு சுமத்தப்படும் வஜிர அபேவர்தனவிற்கு அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

வேறு கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்த ஜயம்பதி விக்ரமரத்ன 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம், நாட்டையே சீர்குலைக்கும் செயற்பாட்டிற்கு வித்திட்டார் என்பதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் மூலம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து வேறு கட்சியை உருவாக்கி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்துள்ள சரத் பொன்சேகாவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த கூட்டு தீர்மானத்தில் கையொப்பமிடவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்