சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 16 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 16 பேர் கைது

by Staff Writer 20-08-2019 | 5:10 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 16 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற போதே சந்தேகநபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிடிப்படையினரும் இணைந்து புத்தளம் - வென்னப்புவ பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 14 பேரும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் ஆட்கடத்தல்காரரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆட்கடத்தல்காரர், ஏற்கனவே ஆட்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. குருநாகல், புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.