இந்தியா, பாகிஸ்தானிடம் ட்ரம்ப் கோரிக்கை

காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயற்படுமாறு ட்ரம்ப் கோரிக்கை

by Chandrasekaram Chandravadani 20-08-2019 | 12:55 PM
Colombo (News 1st) ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைபேசியூடாக அமெரிக்க ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை சில தலைவர்கள் வெளியிட்டு வருவது பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி கூறியிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களிடமும் கலந்துரையாடிய அமெரிக்க ஜனாதிபதி, அது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வர்த்தகம், இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்துதல் ஆகியன குறித்து தனது சிறந்த நண்பர்களான இந்திய பிரதமரிடமும் பாகிஸ்தான் பிரதமரிடமும் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.