இலங்கையுடனான போட்டி; நியூஸிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கையுடனான போட்டிக்கான நியூஸிலாந்து குழாம் அறிவிப்பு

by Staff Writer 20-08-2019 | 2:21 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் நியூஸிலாந்து அணியை டிம் சௌத்தீ (Tim Southee) வழிநடத்தவுள்ளார். அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரன்ட் போல்ட் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் முதலாம் திகதி கண்டி - பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் 3 போட்டிகளும் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடருக்கான 14 பேர் கொண்ட நியூஸிலாந்து குழாம் இன்று (20) காலை அறிவிக்கப்பட்டுள்ளது. குழாத்தில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தீ தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். இஷ் சோதி, மிச்செல் சான்ட்னர் மற்றும் Todd Astle ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு இந்தக் குழாம் பெயரிடப்பட்டதாக நியூஸிலாந்து கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினரான கெவின் லெசன் குறிப்பிட்டுள்ளார். கொலின் முன்ரோ, மார்டின் கப்தில், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரேண்ட்ஹொம் ஆகியோர் இந்தக் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள முன்னணி துடுப்பாட்ட வீரர்களாவர்.