இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல்

by Staff Writer 19-08-2019 | 9:17 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு 15 வங்கிக் கணக்குகள் இருப்பதாக நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் தனியார் வங்கிகள் இரண்டில் முன்னெடுக்கப்படும் 4 கணக்குகள் எந்த நோக்கத்தில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதிகாரிகளால் உறுதிசெய்ய முடியாதுள்ளது. குறித்த 15 வங்கிக் கணக்குகளில் 3 தனியார் வங்கிகளுக்கு சொந்தமான 3 சேமிப்புக் கணக்குகளும் 2 நடைமுறைக் கணக்குகளும் அடங்கலாக 5 வங்கிக்கணக்குகள் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்காய்வாளரால் தெரிவிக்கப்பட்டிருந்த சேஜ் கணக்கு தொகுதியைப் பரிசீலித்தபோது அந்தக் கணக்கு 2 முதல் 7 வருடங்களும் 6 மாதங்கள் வரை செயலிழந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வங்கிக் கணக்குகளின் படி, நேரடியாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை கணக்காய்வுக்கு வழங்குமாறு 2019 மார்ச் 12 ஆம் திகதி கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வாவிடம் கோரப்பட்டிருந்த போதிலும் கணக்காய்வு நடத்தப்பட்ட நாள் வரைக்கும் தனியார் வங்கிக் கணக்குகள் நான்கையும் உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வுக்கு பெற்றுக்கொடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறே தேசிய வங்கித் தொகுதியை விடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் இருப்பதாக மின்னஞ்சலை பரிசீலித்த கணக்காய்வு அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். இந்தக் கணக்காய்வின் மூலம் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் தென் ஆபிரிக்க விஜயத்துக்காக இலங்கைக்கு கிடைக்கவிருந்த இரண்டாம் கட்டக் கொடுப்பனவான 4 35 541 அமெரிக்க டொலர் நிதியை வேறு வங்கிக்கணக்கிற்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிப் பிரிவு தலைவர் 2018 ஜூலை 4 ஆம் திகதி காலை 9.42 க்கு பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வாவுக்கு பிரதியுடன் சோனி நிறுவனத்தின் சந்தீப் பட்டேலுக்கு அனுப்பிய மின்னஞ்சல் தகவலில், அந்த நிதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார். எனினும், அதன் பிறகு 8 நாட்கள் கழித்து ஜூலை 12 ஆம் திகதி காலை 9.16 மணிக்கு பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வாவுக்கு பிரதியுடன் சோனி நிறுவனத்தின் சந்தீப் பட்டேலுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தகவலின் ஊடாக அந்த நிதியை வேல்ஸ் பாகோ எனும் பெயருடைய வங்கிக்கணக்கில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளார். அந்த வங்கியின் வங்கிக் கணக்கை வழங்கவும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தவறியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஜூன் 7 ஆம் திகதி நிதிப்பிரிவுத் தலைவர் பியல் நந்தன திசாநாயக்கவும், 2018 மே 8 ஆம் திகதி பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா எழுத்துமூல அறிவிப்புகளால் இவ்வாறு பணத்தை அனுப்புவதற்கு முயற்சிக்கவில்லை என குறிப்பிட்டாலும் அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பிரிவு தலைவரின் [email protected] எனும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வாவின் [email protected] எனும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள் ஊடாகவே குறித்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த மின்னஞ்சல் தகவல்கள் தொடர்பாக சர்ட் நிறுவனம் முன்வைத்த அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிதிப்பிரிவு தலைவைரான பியல் நந்தன திசாநாயக்க மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா மை மேல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்துவதன் ஊடாக மின்னஞ்சல் செயற்பாட்டில் பிரதிகள் செல்லாதவாறு செயற்படுத்த முடியும் என சர்ட் அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புப் பிரிவை பயன்படுத்தாமல் அடையாளத்தை உறுதிப்படுத்தாது குறித்த பிரிவில் பிரவேசிக்க முடியாது என்றும் சர்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு வங்கிக் கணக்கிற்கு அனுப்புவது தொடர்பாக பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏஸ்லி டி சில்வா மற்றும் நிதிப்பிரிவு தலைவர் பியல் நந்தன திசாநாயக்க ஆகியோர் அறிந்திருக்கவில்லை என்று உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வு அதிகாரிகளுக்கு சாட்சிகளில்லை எனவும் அந்த கண்காணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இனிசெய்ய வேண்டியது இதனுடன் தொடர்புடைய சகலருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி காட்டுவதாகும். கணக்காய்வின் மூலம் இந்தளவுக்கு மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரிவரும் நிலையில் அதிகாரிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இவ்வாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள். குற்றஞ்சாட்டப்படுபவர்களை கைது செய்யாமல் அறிக்கைகளை தயாரிப்பதால் மாத்திரம் என்ன பிரயோசனம்? மேலும், பல தகவல்கள் எம்மிடம் இருப்பதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை அவற்றை வெளிக்கொணர நாம் தயாராக இருக்கின்றோம்​.