லசந்த கொலை உள்ளிட்ட 6 வழக்குகளுக்கு அறிக்கை கோரல்

லசந்த கொலை உள்ளிட்ட 6 வழக்குகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

by Fazlullah Mubarak 18-08-2019 | 5:34 PM

Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட 6 முக்கிய வழக்குகள் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பதில் பொலிஸ்மா அதிபர் C.D.  விக்ரமரத்ன அறிக்கை கோரியுள்ளர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் பிரதான 5 விசாரணைகள் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளிப்பதற்காக அவர் அறிக்கை கோரியுள்ளார். லசந்த விக்ரமதுங்க கொலை, வஸீம் தாஜூதீன் கொலை, கீத் நொயார் கடத்தப்பட்டமை, மூதூரில் நிவாரணப்பணியாளர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டமை மற்றும் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய வழக்குகள் குறித்து சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குறித்த 5 சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை தாமதமின்றி நிறைவுசெய்து விசாரணைகளின் கோப்புக்களை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் குறித்த கடிதத்தில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். இதற்கிணங்க, பதில் பொலிஸ்மா அதிபரினால் குறித்த 5 சம்பவங்களுக்கு மேலதிகமாக ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் உள்ளடங்கலாக 6 விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் விடயங்கள் கேட்டறியப்பட்டுள்ளன. குறித்த 6 விசாரணைகளுடன் தொடர்புடைய 11 விடயங்கள் தொடர்பில், ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் தனித்தனி கோப்புக்களை எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரினால் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்படும் 11 விடயங்களுக்கு இணங்க, குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்ட தினம், விசாரணைகளின் தற்போதைய நிலை, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள், சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்களையும் முன்வைக்க வேண்டும் என கூறப்படுகின்றது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்ட தினம், நீதிமன்றம் மற்றும் வழக்கு எண், அது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அதற்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்பன பற்றியும் தெரிவிக்க வேண்டும். விசாரணைகளை நிறைவுசெய்ய முடியாவிட்டால் அதற்கான காரணம் மற்றும் விசாரணைகளை நிறைவுசெய்ய எதிர்ப்பார்த்துள்ள காலப்பகுதி என்பவற்றையும் குறிப்பிடுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.