இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2019 | 7:48 pm

Colombo (News 1st) வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவோர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 36 அடியாகக் காணப்பட்ட கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் நீர் மட்டம் தற்போது 9 அடியாகக் குறைவடைந்துள்ளது.

நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால், குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 200 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பெரும்போக செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் போதுமான நீர் கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

இதேவேளை, கிளிநொச்சி குளத்தின் நீர் மட்டமும் வெகுவாக குறைவடைந்துள்ளதால், சில பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குளத்து நீர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்டு பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக தமது பகுதிக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி – உதயநகர் மக்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்