மருத்துவக்கழிவுகளை வேப்பவெட்டுவானில் கொட்ட நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 16-08-2019 | 7:30 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகளை வேப்பவெட்டுவான் பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமங்கள் மற்றும் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார். அதற்கமைய, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 70,000 கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை வேப்பவெட்டுவான் பகுதியில் கொட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை மேலதிக நீதவான் ஒத்தி வைத்தார். அதுவரை, வேப்பவெட்டுவான் கிராமத்தில் மருத்துவக்கழிவுகளை கொட்ட முடியும் என்பதுடன், அது குறித்து வைத்தியசாலை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். வேப்பவெட்டுவான் பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகளைக் கொட்டுவதற்கு மக்கள் நேற்று எதிர்ப்புத் தெரிவித்தனர். மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதற்கு திட்டமிடப்பட்ட அரச காணிக்கு அருகில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுவதாலேயே மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வேப்பவெட்டுவான் பகுதியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதற்கு அனுமதி கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.