by Staff Writer 16-08-2019 | 7:16 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸ இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடொன்று விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ள பின்புலத்திலேயே இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்ட நபர்களின் பட்டியலை அமெரிக்கா நேற்று (15) பகிரங்கப்படுத்தியது.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டதாகக் கூறிய கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர், அதில் உள்வாங்கப்படாததை அடுத்து, நாட்டில் தற்போது சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேற்று வினவிய போது, ''புதிய கடவுச்சீட்டின் மூலம் கோட்டாபய வௌிநாடு சென்று வந்தார். அவ்வாறு இடம்பெற முடியாது. அவ்வாறு என்றால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும்,'' என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஸ வௌிநாட்டு பிரஜையாக இருந்து கொண்டு, புதிய தேசிய அடையாள அட்டையொன்றைப் பெற்று, அதன் ஊடாக புதிய கடவுச்சீட்டொன்றை பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, பிரஜைகள் பலம் அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.
இந்த முறைப்பாடு மீதான விசாரணைகளுக்கு தேவையான காரணங்கள் உள்ளனவா என ஆராய்வதற்காக, அதனை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.