கிரீன்லாந்தை வாங்க விரும்பும் ட்ரம்ப்

கிரீன்லாந்தை வாங்க விரும்பும் ட்ரம்ப்

by Bella Dalima 16-08-2019 | 4:46 PM
டென்மார்க் நாட்டிடமிருந்து கிரீன்லாந்து பனித்தீவை வாங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன. வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8,11,000 சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் டென்மார்க் செல்லவுள்ளார். இந்நிலையில், அவர் கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தளம் ஒன்று கிரீன்லாந்து தீவில் ஏற்கனவே செயற்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய ரேடார் மையமாக இருக்கும் இந்த தளத்தில் 600 வீரர்கள் உள்ளனர். மேலும், டென்மார்க் அதன் சுயராச்சிய பிரதேசங்களுக்கு நிதி ஆதாரங்களை பெற முயற்சித்து வருவதாக கடந்த ஆண்டு ட்ரம்ப் கூறியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோன்று, 1946 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முற்பட்டார். ஆனால், அவரது அந்த பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டது.